திண்டுக்கல்லில் மாணவியை தாக்கிய ஆசிரியர்

     திண்டுக்கல் அருகே மாணவியை தாக்கிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். சின்னாளப்பட்டி அருகே உள்ளது கே.புதுக்கோட்டை.
இங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறார் மாணவி பூமிகா. இவருக்கு சரி வர பேச்சு வராது. இந்நிலையில் சரியாக படிக்கவில்லை என்று கூறி பூமிகாவை அவரது வகுப்பு ஆசிரியர் ரீட்டா ஸ்கேலால் அடித்ததாக கூறப்படுகிறது.
இதனால், மூக்கு வழியாக மாணவிக்கு ரத்தம் வழிந்துள்ளது. அதோடு வீட்டுக்கு வந்த மாணவியை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சையளித்தனர். பின்னர் ஊர் மக்கள் திரண்டு வந்து பள்ளியை முற்றுகையிட்டனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த தொடக்கக் கல்வி உதவி அலுவலர் முருகேசன், ஆசிரியர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதனையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
-இணைய செய்தியாளர்-தேனி ராஜா