வடமதுரையை அடுத்த ஏ.வி.பட்டி கிராமத்தில் கிணறு தோண்டும் போது இருவர் பலிதிண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை அடுத்த ஏ.வி.பட்டி கிராமத்தில் கிணற்றுக்குள் தவறிவிழுந்து 2 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக, வடமதுரை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அப்பகுதியில் மழை இல்லாததால், கிணறை ஆழப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக, 8 பேர் அந்த கிணற்றில் வேலை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது, திடீரென எதிர்பாராத விதமாக, கயிறு அறுந்து கீழே விழுந்தது. இதில், கிணற்றில் வேலை செய்த ஆலப்பன் உயிரிழந்தார். அப்போது, அந்த கயற்று கட்டப்பட்ட தட்டில் அமர்ந்து மேல வந்த சீலமநாயக்கர் என்பவரும் பலியானார்.
                                             -இணைய செய்தியாளர்-தேனி ராஜா

பொட்டு சுரேஷ் படுகொலை 7 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.      மதுரையில் திமுக செயற்குழு உறுப்பினர் பொட்டு சுரேஷ் படுகொலை செய்யப்பட்ட வழக்கில்,7 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.
    திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் சபாரத்தினம், சந்தானம், ராஜூ, லிங்கம், செந்தில், சேகர், கார்த்திக், என்கிற 7 பேர் சரணடைந்துள்ளனர். சரணடைந்துள்ள 7 பேரும் மதுரை கீரைத்துறையைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
    முன்னதாக திமுக செயற்குழு உறுப்பினர் பொட்டு சுரேஷ் மதுரையில் கடந்த வியாழன் அன்று படுகொலை செய்யப்பட்டார். அவரது கைப்பேசிக்கு வந்த அழைப்புகளை மையமாக வைத்து, குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வந்தது குறிப்பிடத்தக்கது.

                                                     -பசுமை நாயகன்

பழனியில் நிறுத்தப்படும் ரோப் கார் சேவையால் பக்தர்கள் அவதி


பழனி முருகன் கோவிலில் ரோப் கார் எனப்படும் கம்பி வட சேவை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீர் திடீரென நிறுத்தப்படுவதால் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கம்பி வட ஊர்தி சேவை பாதிப்பு:
பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களில், வயதானவர்கள், உடல் ஊனமுற்றவர்கள் மற்றும் குழந்தைகளின் வசதிக்காக கடந்த 2004ம் ஆண்டு கம்பி வட ஊர்தி சேவை துவக்கப்பட்டது. இந்த சேவை மூலம் மலை அடிவாரத்தில் இருந்து 2 நிமிடத்திற்குள் கோவிலுக்கு செல்ல முடியும். ஒரு மணி நேரத்தில் சுமார் 250 பேர் இந்த சேவையால் பயனடைந்து வந்தனர்.
இந்த கம்பி வட ஊர்தியில் தினமும் ஒரு மணி நேரம் தேவையான பராமரிப்பு பணியை மேறகொள்வதோடு, வருடத்திற்கு ஒரு முறை ஒரு மாதம் சேவை நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.ஒரு மாதம் கம்பி வட ஊர்தி சேவை நிறுத்தப்பட்டு மீண்டும் சேவை துவங்கிய இருபது நாட்களில் கம்பி வட சேவையில் பிரச்னை ஏற்பட்டது. இதன் காரணமாக சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
"பாதிப்பிற்குள்ளாகும் முதியவர்கள்":
கம்பி வட சேவை ரத்து செய்யப்படும் நேரத்தில், பழனி முருகன் கோவிலுக்கு செல்லும் வயதான மற்றும் உடல் ஊனமுற்ற பக்தர்கள் இழுவை ரயில் சேவைக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருக்கிறது . மூன்றில் இரண்டு இழுவை ரயில்கள் மட்டுமே இயக்கப்படுவதால், பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
"விரைவில் நிரந்தர தீர்வு":
அடிக்கடி பழுதாகும் கம்பி வட சேவை பற்றி பழனி முருகன் கோயில் இணை ஆணையர் பாஸ்கரனை தொடர்பு கொண்டு கேட்ட போது பதில் அளிக்க மறுத்துவிட்டார். பொறியாளர் நாச்சிமுத்துவிடம் விசாரித்தபோது, விபத்துகள் ஏற்படாமல் தடுக்கவே, சிறிய பழுது ஏற்பட்டாலும் சேவை நிறுத்தப்பட்டு பழுதுநீக்கப்படுவதாக விளக்கம் அளித்தார். கம்பி வட ஊர்தியில் பராமரிப்பு பணியை மேற்கொண்டு வரும் தனியார் நிறுவன மேலாளர் மூர்த்தி, இன்னும் ஓரிரு நாட்களில் பணி நிறைவடைந்து சேவை துவக்கப்படும் என்று தெரிவித்தார்
பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களில், வயதானவர்கள், உடல் ஊனமுற்றவர்கள் மற்றும் குழந்தைகளின் வசதிக்காக கடந்த 2004-ம் ஆண்டு கம்பி வட ஊர்தி சேவை துவக்கப்பட்டது. இந்த சேவை மூலம் மலை அடிவாரத்தில் இருந்து 2 நிமிடத்திற்குள் கோவிலுக்கு செல்ல முடியும். ஒரு மணி நேரத்தில் சுமார் 250 பேர் இந்த சேவையால் பயனடைந்து வந்தனர்.
இந்த கம்பி வட ஊர்தியில் தினமும் ஒரு மணி நேரம் தேவையான பராமரிப்பு பணியை மேறகொள்வதோடு, வருடத்திற்கு ஒரு முறை ஒரு மாதம் சேவை நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.ஒரு மாதம் கம்பி வட ஊர்தி சேவை நிறுத்தப்பட்டு மீண்டும் சேவை துவங்கிய இருபது நாட்களில் கம்பி வட சேவையில் பிரச்னை ஏற்பட்டது. இதன் காரணமாக சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
                                        -இணைய செய்தியாளர்-தேனி ராஜா

விதிமீறி வழங்கப்பட்ட பதவி உயர்வு: ஆசிரியர்கள் போராட்டம்

           திண்டுக்கல் வடமதுரையில் விதிகளை மீறி, ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கியதாக, தொடக்க கல்வி அலுவலரைக் கண்டித்து முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
மாவட்ட உதவி தொடக்க கல்வி அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கல்வி அலுவலருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
போராட்டம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட கல்வி அலுவலர், போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பிறகு, விதிமுறைகளை மீறி செய்யப்பட்ட பதவி உயர்வை ரத்து செய்து எழுத்துப்பூர்வமாக உத்தரவு பிறப்பித்தார். அதன்பின்னரே போராட்டம் கைவிடப்பட்டது.
 -இணைய செய்தியாளர்-தேனி ராஜா

திண்டுக்கல் அருகே உயர் மின்அழுத்தம் காரணமாக பொருட்கள் சேதம்

           திண்டுக்கல் அருகே உள்ள சீலப்பாடியில் உயர் மின் அழுத்தம் காரணமாக 150-க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாதனப் பொருட்கள் சேதமடைந்தன.
சீலப்பாடி பகுதியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இன்று அதிகாலை மின்சாரம் துண்டிக்கப்பட்டு மீண்டும் வந்த போது உயர்மின் அழுத்தம் காரணமாக வீடுகளில் இருந்த டி.வி, மின்விசிறி போன்ற பல மின்சாதன பொருட்கள் பழுதடைந்தன.
இது தொடர்பாக அந்தப் பகுதி மக்கள் பலமுறை மின்வாரியத்திற்கு தகவல் கொடுத்தும், அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வரவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

 -இணைய செய்தியாளர்-தேனி ராஜா

திண்டுக்கல்லை சேர்ந்தவருக்கு சாகித்ய அகாடமி விருது

          திண்டுக்கல்லைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வராஜ் எழுதிய தோல் என்ற நாவலுக்கு மத்திய அரசு உயரிய இலக்கிய விருதான சாகித்ய அகாடமி விருதை அறிவித்துள்ளது.
திண்டுக்கல்லில் பிரதானத் தொழிலாகத் தோல் பதனிடும் தொழில் திகழ்ந்து வருகிறது. இந்தத் தொழிலில் வேலை பார்த்து வரும் அடிதட்டு மக்களின் வாழ்க்கையையும், 1930 முதல் 1958 வரை தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்க்கையில் நடந்த போராட்டத்தை மையமாக வைத்தும் இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது.
இந்த விருது குறித்து கருத்து தெரிவித்த செல்வராஜ், இந்த வெற்றி கம்யூனிஸ்ட் கட்சிக்குக் கிடைத்த வெற்றி என்றும், இதற்காக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.
 -இணைய செய்தியாளர்-தேனி ராஜா

திண்டுக்கல்லில் மாணவியை தாக்கிய ஆசிரியர்

     திண்டுக்கல் அருகே மாணவியை தாக்கிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். சின்னாளப்பட்டி அருகே உள்ளது கே.புதுக்கோட்டை.
இங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறார் மாணவி பூமிகா. இவருக்கு சரி வர பேச்சு வராது. இந்நிலையில் சரியாக படிக்கவில்லை என்று கூறி பூமிகாவை அவரது வகுப்பு ஆசிரியர் ரீட்டா ஸ்கேலால் அடித்ததாக கூறப்படுகிறது.
இதனால், மூக்கு வழியாக மாணவிக்கு ரத்தம் வழிந்துள்ளது. அதோடு வீட்டுக்கு வந்த மாணவியை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சையளித்தனர். பின்னர் ஊர் மக்கள் திரண்டு வந்து பள்ளியை முற்றுகையிட்டனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த தொடக்கக் கல்வி உதவி அலுவலர் முருகேசன், ஆசிரியர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதனையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
-இணைய செய்தியாளர்-தேனி ராஜா